புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர

தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UNCLOS) கீழ் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டிற்கு 60வது நாடு இணைவதைக் குறிக்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று (25ஆம் திகதி) நியூயார்க்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிற நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 58வது உறுப்பு நாடாக இலங்கை உள்ளது. செப்டம்பர் 16, 2025 அன்று இலங்கை இதில் இணைந்தது. இதன் மூலம் மாநாட்டின் ஒரு தரப்பாக இலங்கை மாறியது.
இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் தொடர்பான ஒப்பந்தம் (BBNJ) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் இப்போது 60 நாடுகளால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு பங்கு பெருங்கடல்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் பல்லுயிர் பெருக்கத்தின் நன்மைகளைப் பாதுகாத்தல், நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ள முயல்கிறது. இந்த ஒப்பந்தம் 2026 ஜனவரி 17 முதல் அமலுக்கு வர உள்ளது.