போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது
அதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதியே தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நீதித்துறை சீராய்வு வழக்கு விசாரணையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் மேல் முறையீட்டின் போது சட்ட ஆலோசகர் ஒருவரும் அவருக்கு நியமிக்கப்பட்டதாக, அறிக்கை ஒன்றில் சி.என்.பி கூறியிருந்தது.
மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் தட்சிணாமூர்த்தி, கருணை மனு தாக்கல் செய்திருந்தபோதும் அது தோல்வியடைந்ததாக சி.என்.பி தெரிவித்தது.
இதேவேளை, எஸ். சாமிநாதன், ஆர்.லிங்கேஸ்வரன், பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகிய மூன்று மலேசியர்களும் சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.