காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்

“மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்.”
இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
” மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக 53 நாட்கள் தொடர்ச்சியாக மன்னாரில் போராட்டம் இடம்பெற்றது.
கொழும்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும், காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய உபகரணங்களை செயற்படுத்துவதற்குரிய அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
மன்னார் மக்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளதா, மன்னார் மக்களின் இறையாண்மை மீறப்பட்டிருக்கின்றதா? என இந்த உயரிய சபையில் கேட்கின்றேன்.” எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி போராட்ட இயக்கமொன்றில் இருந்து வந்துதான் இன்று அரசாங்க தலைவராகியுள்ளார். ஆனால் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி, எமது மக்களின் உயிரை துச்சமென மதிக்கும் வகையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
போராட்டம் தொடரும், தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போராட்டம் வலுபெறும். அது மக்கள் வெள்ளமாக மாறும். மக்களின் உயிரை காவு கொள்ளக்கூடிய இந்த மின் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் தியாகங்களை செய்வதற்குகூட மக்கள் தயாராகவே உள்ளனர் என்பதை இச்சபைக்கு தெரியப்படுத்துகின்றேன்.
ஆகவே, இந்த ஜனாதிபதி மக்களை நேசிப்பவராக இருந்தால் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுத்த வேண்டும்.” – எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டார்.