30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்

30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்

” புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினை உள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, அரசாங்க வதிவிடத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்லர், இந்நாட்டில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் அவர். சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாட்டுக்காக தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றியவர்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்தவுக்கு மூன்று மகன்மார் உள்ளனர், அவர்களால் மஹிந்த ராஜபக்சவை பார்த்துக்கொள்ள முடியாதா என சிலர் கேட்கின்றனர். தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும், பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டுவந்த அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில்தான் பிரச்சினை உள்ளது.

புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். இந்நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல முற்படுகின்றனர். அதனால்தான் அரகலய காலத்தில்கூட நிதி வாரி வழங்கப்பட்டது. அதன் மற்றுமொரு அங்கமாகவே மஹிந்த அநாதரவாக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராம மாவத்தைக்கு வரமாட்டார். அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். உலகில் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுதந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை. தலைவர்களை பாதுகாப்பார்கள். அவர்கள் உயிரிழந்த பின்னர்கூட உடலம் பாதுகாக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படும்.” -எனவும் மொட்டு கட்சி உறுப்பினர் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

Share This