சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்

சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். “எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்புச் செயலாகக் கருதப்படும்” என்று இரு தலைவர்களும் உறுதியளித்தாக பாகிஸ்தான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும் உலகிலும் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கும் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை ஒப்பந்தம் பிரதிபலிக்கவுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அம்சங்களை ஒப்பந்தம் மேம்படுத்தவுள்ளது. எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும், இரு நாடுகளுக்கும் எதிரான திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பாக கருதப்படும் என்றும் ஒப்பந்தத்தின் பிரதான உள்ளடக்கம் கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பிராந்தியப் பாதுகாப்பு நோக்கிலான “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” (Strategic Mutual Defense Agreement- SMDA) குறித்த ஆவணங்களை சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் பரிமாறிக் கொள்வதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் எந்த வேளையிலும் தயாராக இருக்கும் எனவும் அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூட்டு அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த ஒப்பந்தம் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு ஆபத்தாக அமையலாம் என புதுடில்லி ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் சீனா இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அரபு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் இணைந்து நேட்டோ போன்ற ஒரு பாிய இராணுவ கூட்டணியை அமைக்க கட்டாரில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரபியாவும் பாகிஸ்தானும் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாட்டுள்ளமை மேலும் பலம் சேர்க்கும் என பாகிஸ்தான் ரூடே ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Share This