உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.
டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்பதும் தெரியவந்தது.
நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாகக் கூறியுள்ளார்.