2017இல் கூவத்தூரில் நடந்தது என்ன? மௌனம் கலைந்தார் தினகரன்

2017இல் கூவத்தூரில் நடந்தது என்ன? மௌனம் கலைந்தார் தினகரன்

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல அமைச்சர் ஆனார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழக்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். நன்றி மறப்பது நன்றன்று, எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம்.

சிலர் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் அவர்களை மன்னித்து துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். மீண்டும் அவர்கள் திருந்தியபாடில்லை.

மீண்டும் அ.தி.மு.க.வின் கோவிலான கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?
இன்னொருவர் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்களை கடத்தி கொண்டு போனார்கள்.

அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்று சென்னையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல, கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். அதிமுக அரசை பாஜக காப்பாற்றி உள்ளது என பேசுவது தவறு. ஈபிஎஸ்-யை காப்பாற்றியது பாஜக இல்லை; சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் தான்.

சசிகலாவின் பேச்சைக் கேட்டுத்தான் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். 122 எம்.எல்.ஏக்கள் சசிகலா சொன்னதால் தான் வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

துரோகத்தை தவிர ஈபிஎஸ்-க்கு வேறு எதுவும் தெரியாது. தமிழக மக்கள் முட்டாள் அல்ல. தோல்வி பயத்தில் பழனிசாமி உளறுவது தெரிகிறது. நிச்சியம் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு பேசியவர் பழனிசாமி. பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என அனைவருக்கும் தெரியும்.

திமுக, தேஜகூ, விஜய் கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி என 4 கூட்டணிகள் இம்முறை தேர்தலில் களமிறங்கும். அதிமுக தோற்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தோற்க நாங்கள் காரணமில்லை.

Share This