மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன.
சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2009 இற்குப் பின்னர் ‘தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்’ என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.
மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை.
வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.
அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது.
1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது. இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது.
இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி – ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும்.
அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு.
உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.
யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை.
சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை.
எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ஆகியோருடைய படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை நடப்பட்டிருந்தது.
திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன.
ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும்.
ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.
ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது.
மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை.
இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு?
யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு.
கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.
ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம்.
ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம்.
இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா?
மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு.
பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம்
மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு.
ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா?
வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான்.
ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, ‘அரசியல் விடுதலை’ என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா?
இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது.
இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர்.
அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் – பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு.
மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.
மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படக் கூடாது.
மைத்திரி – ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்துள்ளனர் என்பது வேறு. ஆனால் 13 இற்கு கீழ் அரை குறையாகவுள்ள மாகாணங்களின் அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறமை பகிரங்கமாகிறது.
அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது.
1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்.
அ.நிக்ஸன்