யெமன் மீது இஸ்ரேல் தாக்குதல் 35 பேர் பலி

யெமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்டாரின் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்திய மறுநாள் சனா மீது இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலின் போது மருத்துவ மற்றும் எரிபொருள் களஞ்சிய வசதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று யெமன் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சனா, அல்-ஜாவ்ஃப் பகுதிகள் மீதான தாக்குதல்களில் 131 பேர் காயமடைந்துள்ளனர். இப்புள்ளிவிவரங்களை முதற்கட்ட எண்ணிக்கையாக உள்ளது. என்றாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால் உயிரிழந்தவர்களதும் காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சனாவின் அல்-தஹ்ரிர் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், நகரின் தென்மேற்கில் 60வது தெருவில் உள்ள ஒரு மருத்துவ வசதி மற்றும் அல்-ஜாவ்ஃப் தலைநகர் அல்-ஹாஸ்மில் உள்ள ஒரு அரசாங்க வளாகம் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களினால் ஏற்பட்ட தீயை அணைக்கவும், இடிபாடுகளில் சிக்குண்டவர்களை மீட்கவும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் யெமன் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.