பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை சீன – இலங்கை நட்புறவின் மதிப்புமிக்க பரிசாகும்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை நகரசபை வளாகத்தில் அண்மையில் (05) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பயனாளிகளுக்கு சுமார் ரூ. 15 மில்லியன் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் மோட்டார்கள் வழங்கப்பட்டன.
இதன்போது, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட பொலன்னறுவை சிறப்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க சீனத் தூதர் நடவடிக்கை எடுத்தார். சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்த ஆதரவையும் சீன-இலங்கை நட்பு வைத்தியசாலைக்கு அளித்த பங்களிப்பையும் பாராட்டி சீனத் தூதுவருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சகா விஜேமுனி, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க, பொலன்னறுவை சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தில்கா சமரசிங்க மற்றும் சீன பிரதிநிதிகள் உட்பட சுகாதார அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.