முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் – பதறும் கம்மன்பில
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
”முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பை நீக்குவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலான காரணியாகும். பிரபல்யமான தீர்மானங்களின் பின்நிற்க நாம் தயார் இல்லை. இதுதொடர்பிலான உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். புலிகளை ஒழிக்க முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பாரிய பங்களிப்பை வழங்கிய தலைவர்களாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுத்தகாலத்தில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியிருந்தார். அவரது உயிரை பறிக்க புலிகள் ஐந்துமுறை முற்பட்டிருந்தனர் என்பதை முழு நாடும் அறியும். ஜனாதிபதி பதவியின் பின்னர் அவர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்படுமாயின் பதவி காலத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பாதாள உலகத்தை ஒடுக்கவும், போதைப்பொருளை ஒழிக்கவும் ஜனாதிபதிகள் அச்சப்படலாம்.
அவர்கள் பாரதூரமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதிகளுக்கு நீங்கள் ஐந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்கள்தான் இந்த பதவியில் இருப்பீர்கள் அதன் பின்னர் நாம் பார்த்துக்கொள்கிறோம் என பாதாள உலகத்தினர் அச்சுறுத்தல் விடுக்க முடியும்.
ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியது முட்டாள்தனமான தீர்மானமாகும். நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் இராணுவத்தினருக்கு தற்போது பணியில்லை. ஆனால், பொலிஸாருக்கு நாட்டில் அதிக பணி இருக்கிறது. அதனால் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினருக்குதான் குறித்த பாதுகாப்பு பணியை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாகனத்தை கதவை தானே திறந்துகொண்ட இறங்கியதாக இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களில் புகழந்து எழுதி வருகின்றனர். அவர்கள் புகழ்வது தொடர்பில் நாம் புதுமையடையவில்லை. ஆனால், ஜனாதிபதியின் பாதுகாப்பு தலைமை அதிகாரி விசேட பிரதநிதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அறியாமையில் உள்ளார் என்பதே உண்மை. அவர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
ஒரு அரச தலைவர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கும் போதுதான் இலகுவாக எதிரிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக்க முடியும். அவர் வாகனத்தில் இருந்து இறங்கும் இடம் பாதுகாப்பு குறைவான இடமாகவே இருக்கும். அதனால் தான் உலகம் முழுவதும் விசேட பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஜனாதிபதியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இது தொடர்பில் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு இதுதொடர்பில் போதிய அறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன்னர் சுற்றியுள்ள பாதுகாப்பு தொடர்பில் அறிந்து அதன் பின்னரே அவர் கதவை திறக்க வேண்டும். ஜனாதிபதியாக தெரிவானது ஒருவருக்கு கதவை திறக்க முடியாது போகும் என்பதல்ல அதன் அர்த்தம். அவர் அரச தலைவர். அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதாலேயே பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவதானித்த பின்னர் கதவு திறந்துவிடப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மாத்திரமல்ல. தற்போது அவர்தான் எம் அனைவருக்கும் தலைவர். நாட்டின் தலைவர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.