முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு – நிதியமைச்சு

முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு – நிதியமைச்சு

முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் வருமானம் எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே நீதியமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

2025 ஜனவரி முதல் ஜூன் வரையான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும்.

இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி – ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 – 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர்.

அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 – 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார்.

எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This