கிருஷாந்திக்கும் செம்மணிக்கும் சர்வதேச விசாரணையே நீதியை பெற்றுத் தரும்

இதுவரையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தாமல், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி உட்பட கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவது இல்லையென, வடக்கின் தமிழ் பிரதிநிதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
“கிருஷாந்தி குமாரசாமி இந்த இடத்தில் நிலைக்கொண்டிருந்த சந்திரிக்கா அரசாங்கத்தினுடைய ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் வழி மறிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரை தேடிச் சென்ற உறவினர்கள், இங்கு புதைக்கப்பட்டவர்கள் என ஒட்டுமொத்தமாக தமிழ் தேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் இல்லாத நிலையில் இந்த நினைவேந்தலை நடத்துகின்றோம். இந்த சித்துப்பாத்தியில் 240 வரையான எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ளன. இது எதனை காட்டுகிறதென்றால், மாபெரும் இனப்படுகொலைக்கான சான்றுதான் இது. இந்த சான்றுகளை வைத்துக்கொண்டு ஒரு சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் மாத்திரமே இந்த படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.”
29 வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தின் செம்மணியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு கூறினார்.
செப்டெம்பர் 7ஆம் திகதி வடக்கு, கிழக்கு நிளைவேந்தல் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிருஷாந்தி குமாரசாமியின் உறவினர் ஒருவர், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ‘வாசலிலே கிருஷாந்தி’ என்ற செம்மணி பற்றிய கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
முன்னாள் நீதவானால் குற்றப்பிரதேசமான அறிவிக்கப்பட்ட புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள், நீதிக்கு புறம்பான கொலைகளுக்கு ஆளானவர்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நம்புகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 பக்க அறிக்கையில், செம்மணி புதைகுழி விசாரணையில் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவம் ‘இணைந்த தரப்பினராக’ அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிருஷாந்தி குமாரசாமி
சுண்டிக்குளி மகாவித்தியாலய மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செம்மணி சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.
அவரது தாமதத்தால் பதற்றமடைந்த அவரது தாயார் ராசம்மா குமாரசாமி மற்றும் சகோதரர் பிரணவன் குமாரசாமி குடும்ப நண்பரான சிதம்பரம் கிருபாமூர்த்தியுடன் செம்மணி சோதனைச் சாவடிக்குச் சென்று விசாரித்தனர்.
கிருஷாந்தி பற்றிய எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது எனக் கூறிய சோதனைச் சாவடியின் படையினர், மூவரையும் ஒரு பதுங்குக் குழிக்குள் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்திருந்தனர். அன்று இரவு இராணுவத்தினர் பிரணவன், கிருபாமூர்த்தி ஆகியோரை கயிற்றால் கழுத்தை நெரித்து, இருவரின் உடல்களையும் பாதுகாப்புச் சாவடிக்குப் பின்னால் புதைத்தனர். அவர்களின் ஆடைகளை தனியாக புதைத்தனர். ராசம்மாவையும் அதே வழியில் கொலை செய்த இராணுவத்தினர், உடலை சோதனைச் சாவடிக்குப் பின்னால் புதைத்தனர்.
கிருஷாந்தி குமாரசாமி கூட்டு பாலிஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அரசாங்கப் படைகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அப்போதைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தது.
அதன் பின்னர், நான்கு சிவிலியன்கள் காணாமல் போனமை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த அநாமதேய மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, செம்மணி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கமைய செம்மணி இராணுவ சோதனை சாவடி அருகே புதைக்கப்பட்ட நிலையில் நான்கு அழுகிய உடல்கள் மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
9 இராணுவ வீரர்கள் மீது 18 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழு வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் பிற வாய்மொழி ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது.
இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் அடையாளம் காணப்பட்ட 5 இராணுவ உறுப்பினர்களான ராஜபக்ச தேவகே சோமரத்ன ராஜபக்ச, ஜே.எம்.ஜயசிங்க, ஜி.பி.பிரியதர்ஷன மற்றும் ஏ.எஸ்.பிரியஷாந்த பெரேரா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று இராணுவ உறுப்பினர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 4 இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரஞ்சித் அபேசூரிய மற்றும் சட்டத்தரணி ரஞ்சித் பெர்னாண்டோ மற்றும் பல சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்த போதிலும், அதனை ஆராய்ந்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என தீர்மானித்தார்.
செம்மணி மனித புதைகுழி
கிரிஷாந்தி குமாரசுவாமி புதைக்கப்பட்ட பிரதேசத்தில் மேலும் நானூறு முதல் ஐந்நூறு சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தோண்டப்பட்ட நேரத்தில், ஐந்து பேர் கொண்ட குழு 15 பாதுகாப்புப் படையினரை பொறுப்புக்கூறியதோடு நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. மாறாக 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமா அதிபர் அலுவலகத்தில் இருந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மொஹான் பீரிஸின் ஏற்பாட்டில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் நான்கு பேரும் பதவி உயர்வு பெற்றனர். பின்னர் சட்டமா அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி பீரிஸ், இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட, யுத்த காலத்தில் அரசாங்கத்தின் பிரதான சட்ட ஆலோசகராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு பதிலாக மொஹான் பீரிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்தார். இன்று அவர் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக செயற்படுகின்றார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் 3ஆவது கட்டத்தை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, செப்டெம்பர் 1, 2025 அன்று, செம்மணி மனித புதைகுழி குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
“செம்மணி மனித புதைகுழி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளோம் எங்களிடம் மறைக்க எதுவுமில்லை.”
மறுதினமே, ஜனாதிபதி, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் வழியில் செம்மணி மனித புதைகுழியை ஆயு்வு செய்யாமலேயே கடந்து செல்வதை ஊடகவியலாளர்கள் காணொளி பதிவு செய்திருந்தனர்.