இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவான தமிழர் – இன்று பதவியேற்கிறார்

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்க உள்ளார்.
இவரது தாய் ஜானகி, சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கும் போது, “எனது மகன் பிறந்த போது, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து பெயரிட்டேன். அந்த தருணம் நனவாகியுள்ளது” என்றார்.
இந்தியாவின் 16 ஆவது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி பதவி விலகினார். வெற்றிடமான அந்தப் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கமைய, இந்தியாவின் 17 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி.இராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தின் திருப்பூரில் 1957 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, பொன்னுசாமி இராதாகிருஷ்ணன் பிறந்தார்.
வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்ற அவர், கல்லூரி காலத்தில், மேசைப் பந்து, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் ஓட்டப்பந்தயம் எனச் சகல விளையாட்டுகளிலும் சிறந்தவராக விளங்கியுள்ளார்.
16 வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த இவர் 1974 ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான சி.பி.ராதாகிருஷ்ணன், சிறுவயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.