புற்றுநோய் தடுப்பூசி ; ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்யாவின் தேசிய கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும் ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வந்தன. பல ஆண்டு கால முயற்சியின் பலனாக புற்றுநோய்க்கு என்ட்ரோமிக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அவை அறிவித்தன.
கொரோனா தடுப்பூசிகளைப் போலவே அதே எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு அகற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற பக்கவிளைவை ஏற்படுத்தும் கடினமான பாரம்பரிய சிகிச்சைகளுக்கு பாதுகாப்பான மாற்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 48 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனையில் இந்த தடுப்பூசி 100% பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சோதனையில் நோயாளிகளுக்கு புற்றுநோய் கட்டி சுருக்கம் ஏற்பட்டதாகவும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தடுப்பூசி தற்போது ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது.