நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடியாணை உத்தரவு தற்போதைய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை.
எங்களிடம் உள்ள தகவல்களின் படி இந்த சிவப்பு பிடியாணை உத்தரவு கடந்த அரசாங்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக, சிவப்பு லேபிள்களுடன் கூடிய 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகும்.
கோவில் தொற்று காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் போது கூட ஆய்வு செய்யப்பட்டாமல் எந்தவொரு கொள்கலன்ளும் விடுவிக்கப்படவில்லை.
இப்போது சுங்கத்தில் ஒரு போலியான நெருக்கடி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியுடன் சிவப்பு லேபிள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
323 உடன் கூடுதலாக, சிவப்பு லேபிள்களுடன் இதேபோன்ற ஏராளமான கொள்கலன்கள் அந்தக் காலகட்டத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இந்த கொள்கலன்கள் இலங்கைக்குள் கொண்டு வர முடியாத ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
மேலும், இந்த கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.
ஆனால் இன்றுவரை, இந்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் நியாயமான முறையில் விசாரணை செய்து பதில் வழங்குவார் என நம்புகின்றோம்.
இதேவேளை, சமீபத்திய நாட்களில், ஒரு நாளைக்கு நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒவ்வொன்றையும் பாதாள உலகத்திற்குள் போதைப்பொருள் கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளாக அரசாங்கம் விளக்குவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.