சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கு  தீர்மானித்துள்ளதாக  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்த செயலணி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், அதற்கு அவசியமான முடிவுகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்களை
ஒருங்கிணைந்த கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை வெற்றிகரமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர்களுடன் எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திரா, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This