வடக்கில் இன்னும் அகழப்படாத ‘ஐந்து மனிதப் புதைகுழிகளுக்கான சாட்சி’

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மனிதப்புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள மக்களுக்காக முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரொருவர் ஓகஸ்ட் 20ஆம் திகதி யாழ், மண்டைத்தீவு தோட்டக்காணியில் உள்ள கிணறு ஒன்றில் மட்டும் சுமார் 60 சடலங்கள் காணப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
ஊர்காவற்றுறை, அராலி சந்தி, மண்கும்பான் பிள்ளையார் கோயில் அருகில், அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு ஆகிய ஐந்து இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் 35 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல்போன தமது உறவினர்களுக்காக தமிழ் மக்கள் முதன்முறையாக ஓகஸ்ட் 26 ஆம் திகதி மலர்கள் மற்றும் தீபங்கள் சகிதம் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.
அராலி சந்தியில் நடைபெற்ற நிகழ்வில் நினைவேந்தல் தீபத்தை காணாமலாக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் மதியழகனின் தாயாரான சிவசுப்பிரமணியம் மகேஸ்வரி ஏற்றி வைத்தார்.
60-இற்கும் அதிகமான சடலங்கள் காணப்படும் மண்டைத்தீவு கிணறு தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தின் இதுத் தொடர்பில் வெளிப்படுத்தியபோது நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு, நம்பத்தகுந்த தகவல்கள் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.
வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் ஓகஸ்ட் 20 ஷஆம் திகதி மண்டைத்தீவு தோட்டக்காணியில் கிணறு ஒன்றில் இடப்பட்டிருந்த சடலங்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியாளரொருவர் இன்னும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடுதல் நடவடிக்கை தொடர்பில் நினைவுகூர்ந்த சுவாமிநாதன் பிரகலாதன் அன்றைய தினம் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டோரில் 84 பேருக்கு நிகழ்ந்த கதி தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
“சரியாக இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1990ஆம் ஆண்டு எட்டாவது மாதம், இதே மாதத்தில், 25ஆம் திகதி மாலை வேளையில் இராணுவப்படை மண்டைதீவு பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. அதில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பிரதேசங்களில் இருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 84 பேர் எங்கே இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.”
இராணுவம் கைது செய்த நபர்களில் சிலரை விடுதலை செய்ய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அந்த காலப்பகுதியில் மொறட்டுவையிலிருந்து வந்திருந்த சிங்கள பெண்மணி ஒருவர் இருந்தார். அந்த சிங்கள பெண்மணி இராணுவத்துடன் கதைத்து சிலரை விடுவித்தார். இன்னும் சிலரை முன்னால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுவித்தார்.”
கைது செய்யப்பட்ட ஏனையோரை இராணுவம் கொலை செய்து கிணற்றில் போட்டதாகவும் பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அம்பலப்படுத்தினார்.
“ஏனையவர்களை கொலை செய்து கிணறுகளில் போட்டனர். உண்மையில் மண்டைதீவில் மூன்று கிணறுகள் இருந்தன. மூன்று மனிதப் புதைகுழிகள் இருந்த அந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தல் ஆரம்பித்ததன் பின்னர் மண்டைதீவு கிழக்கு முதலாம் வட்டாரத்தில் முத்துமாரியம்மன் கோயில் முன்னால் அமைந்துள்ள கிணற்றை துப்பரவு செய்யும்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் 2004 இல் இரண்டாம் வட்டாரத்தில் கிழக்கு வீதியில் தோட்டக்காணியில் இன்னுமொரு கிணற்றில் 55 அல்லது 60 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.”
அது தொடர்பில் நேரில் கண்ட சாட்சியாளரொருவர் இன்னும் உயிருடன் இருப்பதாக பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் வேலணை பிரதேச சபையில் சுட்டிக்காட்டினார்.
“இது பற்றி நேரில் கண்ட சாட்சியாளர் ஒருவர் – கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர் – உயிருடன் இருக்கிறார். இவ்வாறாக அந்தக் கிணற்றில் 58 அல்லது 60 சடலங்களும் மண்டை தீவு கோயில் முன்னாள் தற்போது RC வித்தியாலயம் இருக்கும் இடத்தில் உள்ள கிணற்றில் ஏழெட்டு சடலங்களும் உள்ளன.”
தனது பிள்ளை உள்ளிட்ட 84 பேரை மண்டைதீவில் காணாமலாக்கியமை தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருமாறு கோரி மண்டைதீவு மூன்றாம் வட்டாரத்தில் வசிக்கும் சூசைதாஸ் ஜேசுரத்தினம் தர்மராணி 2025 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
மனிதப் புதைகுழிகள் தொடர்ப்பான தனது அம்பலப்படுத்தல்களை கடுமையாக ஆட்சேபிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்தக் கடிதத்தின் பிரதி ஒன்றை வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரிடம் கையளித்தார்.
“ஒரே குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் காணாமல்போன குடும்பத்தின் தாய் ஒருவர் இன்னமும் மண்டைதீவில் வசிக்கிறார். மூன்று பிள்ளைகள். நிகழ்ந்த அனைத்தையும் அவர் எழுதியிருக்கிறார். டக்ளஸை சந்தித்திருக்கிறார், டென்சில் கொப்பேகடுவவை சந்தித்திருக்கிறார், மகேஸ்வரி வேலாயுதனை சந்தித்திருக்கிறார். தன் பிள்ளைகள் எங்கே என இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறார். சாட்சிகள் இல்லை, சாட்சிகள் இல்லை என்கிறார்கள். அப்படியானால் இது என்ன? இது அவர் எழுத்து மூலமாக வழங்கியது, தவிசாளர் அவர்களே.”
சுமார் 60 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அதன் போது அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு தான் செலவுகளை பொறுப்பேற்கத் தயார் எனவும் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் முன்வைக்கும் சாட்சியங்களை காணாமல் போனோருக்கான நீதியைக்கோரும் வகையில் தொடர்புடைய தரப்பினருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் சபையின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.