தலை கை கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சிறுத்தை சடலமாக மீட்பு

தலை கை கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சிறுத்தை சடலமாக மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

Share This