வடமாகாண அரச அதிகாரிகள் – மருத்துவத்துறை மீதான குற்றச்சாட்டுகள்

வடமாகாண அரச அதிகாரிகள் – மருத்துவத்துறை மீதான குற்றச்சாட்டுகள்

*நாடாளுமன்ற முறைமை (System) பற்றிய விளக்கம்

*இரு வகை கணக்காய்வுகள்…

*13 ஆவது திருத்தச் சட்டத்தின் தவறுகள்.

அ.நிக்ஸன்-
—- —– ——–
இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் கணக்கு ஆய்வு என்பது மத்திய அரசு – மாகாண அரசு என இரண்டு வகைப்படும்.

மாகாணம் ஒன்றின் கீழ் உள்ள மத்திய அரசுக்குரிய திணைக்களங்கள் மற்றும் தேசிய மருத்துவமனைகள் பற்றிய கணக்குகளை மத்திய அரசின் தேசிய கணக்காய்வுப் பிரிவு (National audit Office) ஆய்வு செய்யும்.

மாகாணங்களில் உள்ள அரச திணைக்களங்கள் மருத்துவமனைகள் பற்றிய கணக்கு ஆய்வுகளை மாகாணங்களின் கீழ் இயங்கும் உள்ளகக் கணக்காய்வு பிரிவு (Internal Audit Units) ஆய்வு செய்யும்.

அரசாங்க பொது கணக்கு ஆய்வு திணைக்களம் (Auditor General General’s Department) மாகாணங்களின் கீழ் இயங்கும் அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் கணக்குகளை ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றது.

அரச திணைக்களங்கள், அரச மருத்துவமனைகள் தங்களின் கணக்குகள் பற்றிய முழு விவரங்களையும் அடுத்து வரும் 12 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், தனியார் வங்கி உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் 6 வருடங்களுக்கு தங்கள் கணக்கு விவரங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

அதேநேரம் எந்த ஒரு கணக்கு ஆய்வுகளும் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.

ஆனால்—

1) சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களில் அவற்றை பார்வையிடலாம்.

2) அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right to Information Act) பிரகாரம் விபரங்களை எந்த ஒரு பொது மகனும் தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் இச் சட்டத்தின் பிரகாரம் விண்ணப்பித்தால், உரிய பதில் கிடைக்கும் என்றில்லை. அல்லது அரசியல் காரணங்களால் தகவல்கள் வழங்க காலதாமதம் ஏற்படலாம்.

3) இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாகாணத்தில் அல்லது மாவட்டத்தில் இயங்கும் அரச திணைக்களம் – மருத்துவமனைகள் போன்றவற்றின் கணக்கு ஆய்வு அறிக்கைகளை நேரடியாக பெற முடியும்.

4) அல்லது நாடாளுமன்றத்தில் வாய்மொழி மூல கேள்வி நேரத்தின் (Oral Questions) போது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினா தொடுக்க முடியும்.

ஆகவே—

இச் செயற்பாட்டு முறைகள் எதுவும் கடந்த ஒரு வருடமாக பின்பற்றப்படாத ஒரு பின்னணியில், வெறுமனே வடமாகாண அரச அதிகாரிகள், மருத்துவமனைகள், மருத்துவ அதிகாரிகள் மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவதன் அரசியல் பின்னணி தொடர்பாகவே இங்கு கேள்விகள் எழுகின்றன.

அத்துடன்—–

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் இருப்பதாக கண்டறிந்தால், உடனடியாக இலங்கை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (The Financial Crimes Investigation Division – FCID) முறையிடலாம்.

அதுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையிட முன்னுரிமை உண்டு.

ஏனெனில் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். உரிய தகவல்களையும் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப் பெறவும் முடியும்.

அத்துடன்—

அந்த முறைப்பாடு பற்றி நாடாளுமன்றத்தின் “கோப்“ எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (Committee on Public Enterprises -COPE of Parliament) அரசாங்க கணக்குகள் பற்றிய விபரங்கள் குறிப்பாக முறைப்பாடுகள் விசாரணைக்கு வரும். அல்லது கோப் குழு முன்னிலையில் அழைத்து விசாரணை நடத்தவும் முடியும்.

அவ்வாறு விசாரணைக்கு வரும்போது ஆதாரங்களை சமர்ப்பித்து குறித்த அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் தலையீடுகள் இருந்தாலும், நிச்சயமாக அந்த முறைப்பாடுகள் உரிய முறைப்படி கோப் குழுவுக்கு கிடைக்கும்.

ஆகவே, இதன் மூலம் குறைந்தபட்சம் ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்த முடியும் அல்லவா?

ஆனால்—-

இதுவரைக்கும் கோப் குழுவில் வடமாகாணத்தின் அரச திணைக்களங்கள் குறிப்பாக அரச மருத்துவமனைகள் ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக அறியவில்லையே…

ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகம் என்பது இலங்கைத்தீவின் அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மாகாண உள்ளகக் கணக்காய்வுகள் மூலம் வடமாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள் சிலவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆனால், கொழும்பு அரசியல் வலைப் பின்னல் இல்லாமல் அந்த முறைகேடுகள் நடத்திருக்க வாய்ப்பு இல்லாமில்லை

ஆகவே, வெறுமனே குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் சிலர், இந்த முறைகேடுகள் தொடர்பாக உரிய முறையில், தகவல்களை வெளியிட்டார்களா?

அந்த உள்ளக கணக்காய்வில் ஊழல் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்திருந்தால், அதனை ஏன் இதுவரை வெளிக்கொணரவில்லை?

ஆகவே குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் சிலர், தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றால், அவ்வாறு சொல்வதை நிறுத்த வேண்டும்…

இப் பின்புலத்தில்தான் வடமாகாணத்தை மாத்திரம் அதுவும் யாழ்ப்பாண சமூகத்தை மாத்திரம் குறிவைத்து நகர்த்தப்படும் இந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு என்பதில் எழுந்துள்ள சந்தேகங்கள் நியாயமானவை என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது..

எந்தத் தொழிலும் புனிதமானது தான். அத்துடன் எந்த ஒரு தொழிலும் முறைகேடுகள் இல்லை என்றில்லை.

ஆனால் மருத்துவம் உயிர் காக்கும் சேவை என்பதால், மருத்துவர்கள் பற்றிய அபத்தமான பிரச்சாரங்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தி விடும் ஆபத்துகள் உண்டு.

அத்துடன்—

1) ஈழத்தமிழர்கள் ஒரு ஊழல் சமூகம்.

2) தமிழ் அதிகாரிகளுக்கு அரச நிர்வாகம் தெரியாது.

3) எதுவுமே தெரியாது.

4) பணம் சம்பாதிப்பது மாத்திரமே நோக்கம்…

என்ற கோணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் இரண்டு வகையான ஆபத்துக்களை கொண்டு வரும்.

A) எண்பது வருட அரசியல் போராட்டத்தை நிச்சயமாக கொச்சைப்படுத்தும். தமிழ் இளையோர் மத்தியில் கொழும்பு நிர்வாகம் மீது அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசு மீதும், சிங்கள அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை உருவாகும் ஆபத்து எழும்.

B) வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் அனைத்திலும் சிங்கள உயர் அதிகாரிகள் நியமிக்கப்படும் நிலை. (ஏற்கனவே சிங்கள அதிகாரிகள் சிலர் நியமனம் பெற்றுள்ளனர்)

ஆகவே, ஊழல் மோசடிகளை நிரூபிக்கக் கூடிய முறைமைகளை பொருத்தமாகவும், உரிய முறையிலும் பயன்படுத்தி மக்களுக்கு உண்மைகளை பகிரங்கப்படுத்தினால் நல்லது.

மாறாக–

பரபரப்பு – விடுப்பு என்ற வியூகங்களில் பேசி நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரச தமிழ் அதிகாரிகள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம்.

மருத்துவ சேவையில் ஈடுபடும் மருத்துவத்துறை மீது களங்கத்தை ஏற்படுத்தி, மருத்துவ நிபுணர்கள் சிலரை புலம்பெயர் நாடுகளை நோக்கி ஓடச் செய்ய வேண்டாம்.

இலங்கை ஒற்றையாட்சி அரசு 2009 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உளவியல் ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததோ, அதற்குத் துணை போகும் பிரதிநிதிகளாக இருக்காமல், அரசு அற்ற இனத்தின் பிரதிநிதியாகவும், குறைந்த பட்சம் அங்குள்ள அரச திணைக்களங்கள் – மருத்துவமனைகள் போன்றவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த அந்த சிறப்பான மூளையை நன்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்புகள்—

A) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புகள் – அதன் சட்டங்கள் முறைமைகள் (System) என்பதுதான் பிரச்சினை. 1950களில் அகிம்சை வழியில் போராடி அப் போராட்டம் அடக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது, போராட்டம் 2009 இல் ஒழிக்கப்பட்டது.

B) ஆகவே, அதன் பின்னரான சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்பினால், குறைந்த பட்சம் அந்த அரச முறைமைகள் ஊடகத்தான் பிரச்சினைகளைக் கையாள வேண்டும்—-

—–ஆனால் தமிழர்கள் சார்ந்த விடயத்தில் System ஒருபோதும் அனுமதிக்காது என்பதை குற்றச்சாட்டுக்களை முன் வைத்த உறுப்பிப்பினர் புரிந்திருக்க வேண்டும்—–

C) அதைவிடுத்து குற்றச்சாட்டுக்களை அடிக்கி, ஒட்டுமொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தி காணொளிகளை மாத்திரம் வெளியிட்டால், பார்வையாளர் எண்ணிக்கை மாத்திரமே அதிகரிக்கும்.

ஆகவே சில கேள்விகள் – குறிப்புகள்—

1) நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கபடவில்லை?

2) வடமாகாண ஆளுநரால் மாவட்ட அரச அதிபர்களை கட்டுப்படுத்த முடியுமா? இல்லை! ஏனெனில் அரச அதிபர்கள் மத்திய அரசின் நேரடி அதிகாரிகள்.

(ஆனால் சந்திரசிறி ஆளுநராக இருந்தபோது அரச அதிபர்களை கட்டுப்படுத்த முடிந்தது. அதற்கான அரசியல் காரணம் வேறு)

3) ஆகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தான், ஊழல் மோசடிகளுக்கு காரணம்…

எனவே System தவறு என்பதை புரிந்து கொண்டு, தமிழ்ச் சமூகத்தின் நாகரீகம் – சுயமரியாதை ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்தும் விடயங்கள் பேசுவதை தவிர்ப்பதே ஆரோக்கியமான தமிழ் அரசியலாக இருக்கும்

Share This