விவசாய உற்பத்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்க விசேட திட்டம்

விவசாய உற்பத்தியை தேசிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு வழங்குவதற்காக தேசிய திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் நேற்று பாராளுமன்றத்தில் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் காணி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
விவசாய உற்பத்திகளை வர்த்தக அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுக்கள் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு வழங்குவதற்கும், விவசாய ஏற்றுமதியை மேற்கொள்ளும் முயற்சியாளர்களை முன்னேற்றுதல் மற்றும் புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதற்காக இவ்விரிவான திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில்; இப்பரந்த திட்டத்தை தயாரிப்பதற்கு அவசியமான சட்டத்தை குறிக்கும் தரவுகளை 45 நாட்களுக்குள் சேகரித்தல், நாட்டில் இடம்பெறும் மொத்த விவசாய உற்பத்திகள், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளின் மொத்த நுகர்வின் சதவீதம், தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திகளின் அளவு, தற்போது காணப்படும் விவசாய உற்பத்திகளில் ஏற்றுமதி செய்யக்கூடியவற்றின் அளவு. போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இத்திட்டத்தை தயாரிப்பதற்கு மூன்று அமைச்சுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக குழு ஒன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, விவசாய அமைச்சின் செயலாளர் டி.ஜே. விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.