மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்

‘யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Share This