மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற செந்தில் தொண்டமான்

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற செந்தில் தொண்டமான்

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இம்மாநாட்டில் உலகெங்குமுள்ள அரசியல், தொழில், ஆய்வு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தமிழ் வல்லுனர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு வழங்குபவர்கள் பங்குபற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில்,

தமிழர்கள் தமிழ்நாட்டில் மாத்திரமின்றி உலகெங்கும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளனர். மன்னர் இராஜராஜ சோழன் காலம் தொடக்கம் தற்போது வரை வணிக ரீதியாக தங்களது வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தனர். தமிழர்கள் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி உலகம் முழுவது வியாபித்துள்ளனர். மேலும் தொழில் வல்லுனர்கள் காலத்திற்கு ஏற்ப தொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கு ஒரு நல்ல உதாரணமாக Nokia கையடக்க தொலைபேசியை குறிப்பிடலாம். 10,15 வருடங்களுக்கு முன்பு Nokia கையடக்க தொலைபேசி மாத்திரமே சந்தையில் முன்னிலையில் இருந்தது. அவர்கள் அவர்களுடைய தரத்தையும், உற்பத்தியையும் இன்றுவரை குறைக்கவில்லை, ஆனால் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டுவராததால் இன்று சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Apple, Samsung போன்ற நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களது உற்பத்தியை மேம்படுத்தியதால் இன்று சந்தையில் அவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். எமது உற்பத்திகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெறவில்லை என்றால் வணிக ரீதியாக நாம் பின்தள்ளப்படுவோம் எனவும், அதற்கு Nokia ஒரு சிறந்த உதாரணம் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலப் பொருளாதார சிந்தனைகள் கொண்ட சர்வதேச அரசியல் தமிழ் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக செந்தில் தொண்டமான் அடையாளம் காணப்பட்டு, இம்மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் தொண்டமானால் கடந்த காலங்களில் மக்கள் நலன்கருதி தொலைநோக்கு சிந்தனையில் முன்னெடுக்கப்பட்ட சேவைகளை அடையாளப்படுத்தி, அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொவிட் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பல்வேறு சமூக, பொருளாதார உடனடி உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தார்.

* இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடி ஒரு பில்லியன் டொலர் Line of credit உணவுப் பொருட்களுக்காக பெற்றுக்கொடுத்தமை.

* 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஆம்புலன்ஸ், பாடசாலை போக்குவரத்து, போன்ற முக்கிய தேவைகளுக்கு பாரிய நெருக்கடி நிலவியது, எதிர்காலத்தில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையோடு, இந்தியா அரசுடன் கலந்துரையாடி, இந்தியாவில் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலையில் உள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிகளுக்கு குழாய் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ள கூடிய முதல் கட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாட்டுக்கிமிடையில் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்டமை. இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிரந்தரமாக தவிர்க்கப்படும்.

* பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டு இரு நாட்டு பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது போல, சுற்றுலாத்துறையையும், வணிகத்தையும் மேம்படுத்த இலங்கை தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஷ்கோடிக்குமிடையில் பாலம் அமைப்பது குறித்து ஆய்வினை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஆரம்பித்தமை. இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் உலகின் மூன்றாவது வளர்ச்சியடையும் பொருளாதார நாடான இந்தியாவின் வளர்ச்சி இலங்கையை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும்.

* 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது தமிழக அரசிடம் கலந்துரையாடி இலங்கையில் பொருளாதார பின்னடைவில் வாழும் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியை பெற்றுக் கொடுத்தமை.

* இலங்கையில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த வைத்தியசாலைக்கு 3 மாதங்களுக்கு தேவையான இலவச மருந்துகள் பெற்றுக்கொடுத்தமை.

* பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 மெட்ரிக் தொன் பால்மாவை பெற்றுக் கொடுத்தமை.

* 40 வருட காலமாக இந்தியாவில் முகாம்களில் அகதிகளாக இருந்து வெளியே வர முடியாத நிலையில் இருந்த 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தியாவில், இலங்கை கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை உருவாக்கி இன்று அவர்கள் அயல் நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் கொடுத்து, அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தியமை.

* 2022 ஆம் ஆண்டு மலேசியாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் மூலமாக மலேசிய அரசுடன் கலந்துரையாடி இலங்கையில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு working visa பெறுவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தமை.

* சுற்றுலாத்துறையை மேம்படுத்த திருகோணமலைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பித்தமை.

* இலங்கை புகையிரத சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசிடமிருந்து 15 மில்லியன் டொலர் பெற்றுக்கொடுத்தமை போன்ற பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமைக்காக ரைசின் உலகவல்லுனர் 15 வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் அழைக்கப்பட்டதுடன், அவர் பாராட்டி கௌரவபடுத்தப்பட்டார்.

Share This