ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு

A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன.
ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன்.
வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது.
வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும்.
கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும்.
இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன.
இதற்குப் பிரதான காரணங்கள்
1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது.
இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும்.
2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன.
அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன.
3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது.
4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்?
1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது.
இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும்.
முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும்.
ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும்.
2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும்.
A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும்,
B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும்,
C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும்
(ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும்.
3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது)
வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம்.
வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன்.
இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்”
வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்!
தொகுப்பு – சுயாந்தன்