”ஹரிணி மௌனம்” – அரசாங்கத்துக்குள் என்ன நடக்கிறது?

”ஹரிணி மௌனம்” – அரசாங்கத்துக்குள் என்ன நடக்கிறது?

தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் கடந்த சில மாதங்களாக வலுத்து வருவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யமான உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஜே.வி.பியின் பாரம்பரியத் தலைவர்கள் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவருக்கு நெருக்கமான எம்.பிகள் தொடர்பில் இவர்கள் அதிகளவான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒரு கருத்தை கூறுவதும் அதனை மறுத்து சில அமைச்சர்கள் மாற்றுக் கருத்தை கூறுவதும் கருத்து மோதல்கள் முற்றியுள்ளதன் வெளிபாடே எனத் தெரியவருகிறது.

ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலின் சில உண்மைகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் திரைக்குப் பின்னால் இன்னும் பல அறியப்படாத உண்மைகள் உள்ளதாகவும் இந்த மோதல்கள் காரணமாக ஜேவிபி அல்லாத தேசிய மக்கள் சக்தியின் தனிக் குழுக்கள் உருவாகி வருவதாகவும் தெரிய வருகிறது.

மக்கள் ஆணை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்த போதிலும் அரசின் பல முக்கியமான தீர்மானங்கள் ஜே.வி.பி பாரம்பரிய தலைவர்களின் அழுத்தத்தின் பேரில் எடுக்கப்படுவதாகவும் அந்தத் தீர்மானங்கள் எடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரிய வருகிறது.

இதனால் அரசியல் ரீதியாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான பல எம்.பிகள் குழப்பத்தில் உள்ளனர். அரசாங்கத்திற்குள் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு இல்லை. இவர்கள் தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஜேவிபியால் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து தகவல்களை பகிர்ந்து வருவதாக அறிய முடிகிறது.

ஆனால், அரசாங்கத்தில் தமது தரப்பு அதிக ஆதரவு இல்லாததால் பிரதமர் ஹரிணி முழுமையான அரசியல் மௌனத்தை கடைப்பிடித்து வருகிறார்.

Share This