அநுர அரசில் சலசலப்பா? முக்கிய அமைச்சர் ஒருவர் இராஜினாமாவுக்குத் தயார்!

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக பணியாற்றிவரும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டு வருவதால் விரைவில் அவர் பதவி விலகும் முடிவை எடுக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015இல் உரக் கூட்டுத்தாபனத்தில் நிதி முறைகேடு செய்ததாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வழக்குத் தொடரத் தயாராகி வருவதாகவும் இவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர எதிர்க்கட்சிகள் தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதாலும் இவ்வாறு பதவி விலகும் முடிவை அவர் விரைவில் எடுக்காவிடின் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என அறிய முடிகிறது.
இதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு என இரண்டு வழக்குகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குமார ஜெயக்கொடி கடுமையான நிலையை எதிர்கொள்ள நேரிடும். அது அரசாங்கத்துக்கும் பாதகத்தை ஏற்படுத்தும்.
அமைச்சர் ஜெயக்கொடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும், அவர் பல ஆண்டுகளாக ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகக் இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது அநுரகுமார திசாநாயக்கவால் உரக் கூட்டுத்தாபனத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபரே குமார ஜெயக்கொடி.
அப்போதிருந்து குமார ஜெயக்கொடியும் அநுரகுமார திசாநாயக்கவும் ஒரு வலுவான பிணைப்புடன் பணியாற்றியுள்ளனர். மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குமார ஜெயக்கொடி அநுரவின் பிரச்சாரத்தில் ஒரு வலுவான பங்கையும் கொண்டிருந்தார். 2015 ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அவர் இருந்தபோது ரூ.8 மில்லியன் நிதியை அவர் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், குமார ஜெயக்கொடி பதவி விலகுவது நல்லது என்று அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்கள் சிலரால் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமார ஜெயக்கொடியை இதுவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்கவில்லை. இருப்பினும், தேசிய மக்கள் கட்சியின் மூத்த அமைச்சரவை அமைச்சர்களுடனான அவரது வாராந்திர சந்திப்புகளில், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, குமார ஜெயக்கொடி விருப்பத்துடன் பதவி விலகுவது நல்லது என்று ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆனால், எவ்வித இராஜினாமா திட்டமும் குமார ஜெயக்கொடியிடம் இல்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது தற்போது பேசுப்படும் கருத்தாக உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கங்களுக்கு தீனி போடும் ஒரு விவகாரமாக இது மாறலாம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.