ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி

ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புடின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

பின்னர் பேசிய ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், “ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது” என்று கூறினார்.

புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஜெலன்ஸ்கி உடன் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேலும் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பு தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கள்கிழமை, ட்ரம்ப்-ஐ நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்ல உள்ளார். ட்ரம்ப் உடன் நீண்ட, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, திங்கள்லன்று ட்ரம்ப்பை வொஷிங்டனில் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Share This