ஆதனவரியில் மாற்றமில்லை! வவுனியா மாநகர சபையின் விசேட அமர்வில் தீர்மானம்

மாநகரசபையின் ஆதனவரி அறவீட்டில் மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்த போதிலும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் 8:10 என்ற அடிப்படையில் அறவிடுவதாக விசேட அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வவுனியா மாநகரசபையின் ஆதனவரி தொடர்பான விசேட அமர்வு இன்று காலை இடம்பெற்றிருந்தது.
கடந்த அமர்வில் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஆதனவரியினை குறைக்குமாறு தேசிய மக்கள் சக்தி, தொழிலாளர் கட்சி, இரு சுயேட்சை குழு என எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனால் அந்த அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட அமர்வு ஒன்று நடாத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கமைய இன்றைய அமர்வு குழுநிலை விவாதமாக இடம்பெற்றது.
குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதனவரியை குறைக்க வேண்டும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ப்படுத்தக்கூடாது என்றும், சில வட்டாரங்களில் உள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிப்படைவார்கள் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மாநகரசபையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை சுட்டிக்காட்டி ஆதனவரியை குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும், வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் அறவிடவேண்டிய தேவை இருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து 8:10 என்ற அடிப்படையிலேயே ஆதனவரியை அறவிடுவதுடன் அடுத்த வருடம் அதில் மாற்றத்தை செய்யமுடியுமா என ஆராயலாம் என குழுநிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.