அமைதிக்கு இணங்காவிட்டால் ரஷ்யா விளைவுகளைச் சந்திக்கும்: டிரம்ப்

உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அந்தப் பின்விளைவுகள் என்ன என்பதைத் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றபோதும் ஆகஸ்ட் 15ஆம் திகதி அலாஸ்காவில் புட்டினுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பு பலன் தரவில்லை என்றால் பொருளியல் தடைகள் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
நேற்று 13ஆம் திகதி ஐரோப்பியத் தலைவர்கள், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோரிடையே இணையம்வழி கலந்துரையாடலில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். அதன் முடிவில் டிரம்ப் கூறிய கருத்து உக்ரேனுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
எனினும், உக்ரேன், ஐரோப்பா ஆகியவற்றின் உறுதியான வேண்டுகோள்களை ரஷ்யா பெரும்பாலும் நிராகரிக்கக்கூடும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முன்வைத்த அதன் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ரஷ்யா இதற்குமுன் கூறியது.
ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்திப்புக்குப் பின் போரை நிறுத்த புட்டின் சம்மதிக்காவிட்டால் ரஷ்யா பின்விளைவுகளைச் சந்திக்குமா என்ற கேள்வி, “ஆம், அது சந்திக்கும்,” என்று டிரம்ப் பதிலளித்தார்.
அந்தப் பின்விளைவுகள் தடைகளா அல்லது வரிகளா என்ற கேள்விக்கு, “நான் அதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் கடுமையான பின்விளைவுகள் இருக்கும்,” என்றார் டிரம்ப்.
ஸெலென்ஸ்கியை ஈடுபடுத்தும் கலந்துரையாடலுக்கான ஆயத்தப் பணியாக அலாஸ்காவில் புட்டினைச் சந்திக்கும் நோக்கங்களில் ஒன்று என டிரம்ப் குறிப்பிட்டார்.
“முதல் சந்திப்பு நல்ல முறையில் இருந்தால் உடனடியாக இரண்டாவது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம்,” என்றார் அவர்.
“அந்தக் கூட்டத்தை உடனடியாக நடத்த விரும்புகிறேன். ஜனாதிபதி புட்டின், ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே இரண்டாவது கூட்டத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்வேன். அவர்கள் விரும்பினால் நானும் அங்கிருப்பேன்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
இரண்டாவது கூட்டத்துக்கான காலவரையறையைத் டிரம்ப் குறிப்பிடவில்லை.