வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக அமைச்சர் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘ கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமலுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப் பணிகளைச் செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபாரச் சந்தையில் உள்ள 35வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.