பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை

34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாதனையுடன் கூடிய கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றிருந்தது.

தொடர்ந்து இரு அணிகளும் மூன்றுக் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான் அணி பந்து வீசியிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை குவித்திருந்தது.

எனினும், 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணி 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

Share This