ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுட்டிப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடக்க இருப்பதால் அந்தத் திகதியை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இந்த மாற்றம் சம்பந்தமாக நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கள் கிழமை 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் அனுட்டிப்பை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு வடகிழக்கு முழுவதையும் முடக்கி எமது எதிர்ப்பை பாரிய அளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.