மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மகாபோதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டில் ஈடுபட கயா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பீகார் அமைச்சர்களான பிரேம் குமார், சந்தோஷ் குமார் சுமன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கயா மாவட்ட நீதவான் எஸ்.எம்.தியாகராஜன் , மகாபோதி ஆலய நிர்வாகக் குழுவின் செயலாளர் மஹாஸ்வேதா மஹாரதி மற்றும் பலருடன் இணைந்தே வழிபாட்டில் ஈடுபட்டார்.
புத்தர் தனது முதல் வாரத்தைக் கழித்த போதி மரத்தின் நேரடி வழித்தோன்றலாகக் கருதப்படும் புனித போதி மரத்தின் கீழ் அவர் பூக்களை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி மகாபோதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.