பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்

பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கைத்தொழில்துறை, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் இந்த ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பெரியசாமி குமரன் குறிப்பிடுகையில், இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்திருந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக் கட்டமைப்பு போன்ற இந்திய பாதுகாப்பு தளங்களின் ஏற்றுமதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு பாதுகாப்பு உற்பத்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தின் போது இரு நாடுகளது ஆயுதப் படைகளுக்கும் இடையிலான இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கான கூட்டு இராணுவப் பயிற்சி குறித்தும் கலந்துரையாடி உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு, கூட்டுப் பயிற்சிகள், கூட்டு ஒத்துழைப்பு, கடல்சார் நடவடிக்கைகள் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

இவ்விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி முர்மு திரௌபதி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய அரசியல் தலைவர்களையும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை தெரிந்ததே.

 

Share This