யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய முயற்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய துறையாக உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் துறை தனது முதலாவது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடாத்த உள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், நியூஸ்லாந்து ஒக்லாண்ட் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து வருகைதரும் பேராசிரியர்கள் இம்மாநாட்டில் ஆதார சுருதி உரைகளையும் பேருரைகளையும் ஆற்றவுள்ளனர்.
‘ஆங்கிலத்தின் காலனிய நீக்கம்’ பற்றியதான கருப்பொருளில் நடாத்தப்படும் இம்மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவரும் தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியராக பணியாற்றுபவருமான கலாநிதி சுரேஸ் கனகராஜாவின் ஒழுங்கமைப்பு வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையிலும், கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல் துறைத் தலைவர் கலாநிதி கி. சண்முகநாதன் ஆகியோரின் இணைத் தலைமையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இம்மாநாட்டில் மொத்தம் 96 ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களாலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஆங்கிலத் துறை சார்ந்த ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை 11.08.2025 அன்று காலை 8.30 மணி முதல் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் கந்தையா சிறிகணேசன் அழைப்புவிடுத்துள்ளார்.