வெற்றியுடன் விடைபெற்றார் டிம் சௌத்தி

வெற்றியுடன் விடைபெற்றார்  டிம் சௌத்தி

நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சர் டிம் சௌத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இங்நிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், டிம் சௌத்தி ஓய்வு பெற்றுள்ளார்.

மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தாலும், தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

ஹமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியினர் 143 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர், 453 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 156 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 658 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் ஜேக்கப் பெத்தெல் 76 ஓட்டங்களை குவித்தார்.

நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் நான்கு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி மற்றும் டிம் சௌதி தலா இரண்டு விக்கெட்டுகளையும், வில் ரூர்க்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

எனினும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்தப் போட்டியுடன் டிம் சௌத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 391 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This