செம்மணி மனித எச்சங்கள் மிகப்பெரிய அத்தாட்சியாகும் – அகில இலங்கை இந்து மாமன்றம்

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகின் கவனத்தை ஈர்த்து, மிகப்பெரிய அத்தாட்சியாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச விசாரணையாக மாறி, எமது மண்ணில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக உலகம் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மற்றும் எலும்புக்கூடுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு பேரை இழந்து, காணாமல் போனவர்களின் சூழலில் தமிழ்ச் சமூகம் கவலையுடன் உறைந்திருக்கிறது.
இந்தப் புதைகுழி அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் அளித்துள்ளது. எனவே, செம்மணி புதைகுழி விவகாரத்தில் நீதியான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள நீதித்துறை அதிகாரிகளை நன்றியுடன் பாராட்டும் அதே வேளையில், இவ்விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும். பச்சிளம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வேறுபாடின்றி இவ்வளவு கொடூரமாகப் புதைக்கப்பட்டவர்களின் துயரச் செய்தி உலகத்தை உலுக்கியுள்ளது.
இந்த இரக்கமற்ற, மன்னிக்க முடியாத சம்பவத்திற்கு இலங்கையில் வாழும் மனிதநேய அமைப்புகள், சமயப் பெரியோர்கள் மற்றும் ஈரநெஞ்சம் கொண்ட அனைவரும் நேர்மையாகக் குரல் கொடுத்து, செம்மணி விவகாரத்தில் நீதியான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், எமது சமூகம் துன்ப நிலையில் தொடர்கிறது. காணாமல் போனோரின் தாய்மார்கள் கண்ணீர் வடிப்பதும், வெளிநாட்டுத் தூதுவர்களிடம் மன்றாடி அழுவதும், அவர்கள் காட்சிப்பொருளாக மட்டும் கருதப்படுவதும் தொடர்கிறது. ஆனால், இதற்கு நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.
செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய அத்தாட்சியாகும். இவ்விசாரணை சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு, எமது மண்ணில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.