இலங்கையில் இன ஐக்கியத்துக்கு மாகாண சபைகள் அவசியம் – இந்தியா
இலங்கையில் இன ஐக்கிய மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருபதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் சென்றார். இந்தப் பயணத்தில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு தரப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடத்தியிருந்தார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று மாலை புதுடில்லியில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்போது 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேசப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்களில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தேர்தல் காலங்களில் அவர் இதுகுறித்து கூறியிருந்தார். வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில அவருக்கு ஆதரவு கிடைக்கப்பெற்றது.
தமிழ் மக்கள் தொர்பிலான விவகாரம் நீண்டகாலமாக பேசப்படும் பிரச்சினை. இருதரப்பு பேச்சுகளில் இந்த விடயங்கள் தொடர்பில் சில விடயங்களில் பேசப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் எடுத்துரைத்ததுடன், இன ஐக்கிய மற்றும் உண்மையான நீதிக்கு மாகாணகளின் அவசியம் தொடர்பிலும் பேசப்பட்டது.” என்றார்.