இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குமிடையில் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
இந்த சுமுகமான சந்திப்பில், இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தமது வலுவான உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபித்தமை தொடர்பில் ஜேர்மன் தூதுவர் கௌரவ சபாநாயகருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இது இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் நேர்மறையான முயற்சியாகும் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அண்மையில் ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், இது பயனுள்ளது மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய தூதுவர், நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.
சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீட்டு வசதிகள் போன்ற துறைகளில் ஜேர்மன் இலங்கைக்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்களின் அனுமதிகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு ஜேர்மன் வழங்கிவரும் நீண்டகால ஆதரவிற்கு சபாநாயகர் வைத்தியர் விக்ரமரத்ன இதன்போது நன்றி தெரிவித்தார். 1959 ஆம் ஆண்டு ஜேர்மன் குடியரசு மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் குறித்து அவர் விசேடமாக குறிப்பிட்டதுடன், இது பல தசாப்தங்களாக இலங்கை இளைஞர்களுக்கான தொழில் பயிற்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் 5வது பெரிய ஏற்றுமதி இடமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 4வது பெரிய நாடாகவும் ஜேர்மன் இருப்பதாகத் தெரிவித்த அவர், வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு தேவையான வலுவான நல்லிணக்க பொறிமுறையின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜேர்மன் நாட்டின் ஆதரவை சபாநாயகர் கோரினார்.
வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.