பிரிக்ஸில் இலங்கையை இணைக்குமாறு மோடியிடம் அநுர வேண்டுகோள்

பிரிக்ஸில் இலங்கையை இணைக்குமாறு மோடியிடம் அநுர வேண்டுகோள்

இலங்கையை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டு உலகின் பலம்வாய்ந்த பொருளாதார அமைப்பாக இயங்கும் பிரிக்ஸில் இணைவதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு கோரிக்கை முன்வைத்திருந்தது. தற்போதைய அரசாங்கமும் அந்த கோரிக்கையை கடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத் தொடர்பில் முன்வைத்திருந்தது.

பிரிக்ஸில் இணைவதற்கு இலங்கை முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இம்முறை தலைமை பொறுப்பை ஏற்றுள்ள ரஷ்யா, இலங்கையின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என கூறியிருந்தது.

இந்த நிலையில் அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டையும் பிரிக்ஸில் இணையும் விருப்பத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று மாலை புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறியிருந்தார்.

அத்துடன், இலங்கையில் கோரிக்கையை சாதகமான முறையில் பரிசீலிக்கும் உறுதிமொழியை பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share This