மகளிர் யூரோ கிண்ணம் – ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியனானது

மகளிருக்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி சம்பியனாகியுள்ள.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் யூரோ கிண்ணத்தை இங்கிலாந்து அணி தனதாக்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முறையாக யூரோ கிண்ணத்தை வெற்றிகொண்ட பின்னர் இரண்டாவது முறையாகவும் தற்போது இங்கிலாந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் ஸ்பெயின் அணி வைத்திருந்தது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே அணிக்காக முதல் கோலை அடித்திருந்தார். பின்னர் இங்கிலாந்து அணி சார்பில் ரூசோ 57வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. மேற்கொண்டு இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் போக போட்டி நேரம் முடிவுக்கு வந்தது. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதலாக நேரத்திலும் இரு அணியின் தரப்பிலும் கோல் அடிக்க முடியவில்லை.
இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று யூரோ சம்பியன் ஆனமை குறிப்பிடத்தக்கது.