“ஜனாதிபதி அன்பளிப்பு ” – பரவும் செய்திகள் பொய்யானவை
“ஜனாதிபதி அன்பளிப்பு ” எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இது தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்குக் குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது.
அரசாங்கத்தினால் அறிவித்தல் செய்யப்பட்ட அரச கொள்கை மற்றும் முடிவுகளை திரிபு படுத்தி இவ்வாறான பொய்யான செய்திகளைப் பிரசாரம் செய்ய வேண்டாம் என சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அடிப்படையற்ற பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிமாறிக்கொள்வதிலிருந்து பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் கோரியுள்ளது