பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள் – இலங்கையர்களுக்கும் மூடப்படும் வாய்ப்பு

பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், இந்த வேலைக்காக இலங்கையிலிருந்து ஏராளமானோர் சென்றிருந்த நிலையில், எதிர்காலத்தில் இந்த வேலை மூலம் இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் வாய்ப்பு மூடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்த வேலைக்கு வருபவர் தவிர, குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த வேலைக்கு பிரித்தானியாவுக்கு வர விசாக்கள் வழங்கப்பட்டன.
எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வேலைக்கு வருபவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது, தற்போது புதிய சட்டம் இந்த வேலைக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வதை முற்றிலுமாக தடை செய்கிறது.
கூடுதலாக, பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் தங்கி வேலை செய்ய வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு அனுமதியை 18 மாதங்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கவும் பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் வேலை செய்ய வேலை அனுமதி வழங்கக்கூடிய வேலை வகைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் வருடத்திற்கு சம்பாதிக்க வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் 40,000 பவுண்ட்ஸ்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வேலை அனுமதியுடன் பிரித்தானியாவில் பணிபுரியும் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிரந்தர குடியிருப்பு, தற்போது பத்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
படகு மூலம் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களில் பிரித்தானியாவுக்கு வந்து அகதிகளாக வாழ விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு அருகில் அந்நாட்டு மக்கள் அடிக்கடி போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
கடந்த அரசாங்கம் ருவாண்டாவில் அகதிகளை மீள்குடியேற்ற ஒப்புக்கொண்டிந்தது.
ஆனால் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது ருவாண்டாவில் அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான முடிவு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.