தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் – மகேஷ் அம்பேபிட்டிய தெரிவிப்பு

அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.”- என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார்.
சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘’சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ தின நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக 17 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இம்முறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சகோதரத்துவ ரயில் பயணம் இடம்பெறவுள்ளது.
1981 மே 31 ஆம் திகதி யாழ்.வந்த ரயில் நிலையத்தில் குருணாகலை ரயில் நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது. காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர். அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர்.
எனவேதான் அந்த ரயிலில் சகோதரத்துவத்தை நாம் நாளை எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது. இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடக்கையும், தெற்கையும் தமது அரசியலுக்காக அரசியல்வாதிகள் பிரித்தார்கள். தமது சுகபோக வாழ்வுக்காக மக்களை பிரித்தார்கள். அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது. புதிய நாடு உருவாகி வருகின்றது. புதிய யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.‘‘ என்றார்.