முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறையை மீறி அந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஆதாயம் பெறும் நோக்கில் தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு விநியோகித்ததன் மூலம் ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அன்றைய தினத்திற்கு முன்னர் கிராம மட்டத்தில் சாட்சிகளாக இருக்கும் அரசு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்றும் நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

CATEGORIES
TAGS
Share This