செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் கொண்டு வந்த பிரேரணையினை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட 34 உறுப்பினர்களும் ஏக மனதாக ஆதரவு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் இரண்டாவது சபை அமர்வு மாநகரசபை முதல்வர் சிவம் பாககியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தமிழரசு கட்சியின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் இடம்பெற்ற படுகொலைக்கு கணடனம் தெரிவித்தும் அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என கோரி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து உரையாற்றினார்.

இதன்போது அவர் சகோதரி கிசாந்தினி படுகொலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செம்மணி படுகொலை தமிழ் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்யும் ஒரு அங்கமாக பார்க்கின்றேன்.

சோமரத்தின ராஜபக்ஷ என்ற சிங்கள இராணுவத்தைச் சேர்தவர் சர்வதேச மன்னிப்பு சபையின் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட அவர் லழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் செம்மணி படுகொலை தெரியவந்து புதைகுழி தோண்டப்பட்டது ஆனால் இடைப்பட்ட காலத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எச்சங்களை தோண்டி எடுத்து எரிக்கப்பட்டபோது அங்கு புகை மண்டலம் வந்தது என பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து மீண்டும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தம் காரணமாக தோண்டப்பட்டு இதுவரை சிறுவர்கள் உட்பட 65 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்தின ராஜபக்ஷவின் உயர் அதிகாரிகளின் பணிப்புக்கு அமைய 400 க்கு மேற்பட்ட எங்கள் உறவுகளை அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த படுகொலைகளைப் பற்றி ஆராயப் போனால் மட்டக்களப்பிலே சத்துருக்கொண்டான், மிருசுவில் படுகொலை என ஏகப்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளது.

இந்த மிருசுவில் படுகொலையில் சுனில் ரத்நாயனக்கா என்ற இராணுவ வீரர் 8 பேரை கொலை செய்து 9 வது நபரை கொலை செய்ய முற்பட்டபோது அவர் தப்பி ஒடி வெளிக் கொண்டுவந்ததில் அந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.

எனவே எமது இனத்தை திட்டமிட்டு அழிக்கும் எவரையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

எனவே இந்த தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடர்பில் எதிர்கால இளம் சமூதாயம் அறிந்து கொள்ள வேண்டும்

இதனடிப்படையில் தற்போதைய அநுர அரசாங்கம் இந்த செம்மணி படுகொலை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை இந்த விசாரணை சர்வதேச கண்கானிப்புடன் இடம்பெறவேண்டும் என்பதுடன் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரேரனையை முன்வைத்து உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 11 பேர் உட்பட 34 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

Share This