பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பல தனிநபர் விமர்சனங்கள், குழப்பங்கள் என்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் வழமைபோன்று எதிர்பார்ப்புகள் பெரிதாக நிறைவேறாத நிலையில் முடிவடைந்தது.

எனினும், வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள சில பதவிகளுக்கு ஆளணியை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்ற செய்தியுடன் நேற்றையக் கூட்டம் நிறைவுக்கு வந்தது

குறிப்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று ( 17.07.2025) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதனிடையே யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

கூட்டத்தில் கருத்து தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, “யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். நோயாளிகளாக உருவாக்க வேண்டாம்

இங்கு வருபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கூட்டத்திற்கு வந்து கூச்சலிடுவதால், அதிகமாக சத்தமிடுவதால் இதய ரீதியான தாக்கங்கள் இடம்பெறும். இதனால் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று வலியுறுத்தினார்.

இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கேள்விகள் கேட்க்கப்பட்டால் அதற்கான பதிலை வழங்குமாறும், கேட்கவேண்டிய கேள்விகளை உரிய சந்தர்ப்பத்தில் கேட்டாக வேண்டும்” என கூறியுள்ளார்.

வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This