சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகததால், இந்த வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு மற்றொரு திகதியை வழங்குமாறு அரசு தரப்பு சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, வழக்கை ஒகஸ்ட் நான்காம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கில் கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்தார், மேலும் அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒரு இராணுவ சார்ஜென்ட் மற்றும் மூன்று கார்போரல்கள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உட்பட, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ் 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இதில் அவரை படுகொலை செய்ய சதி செய்தல், கொலைக்கு உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருத்தல் ஆகியவை அடங்கும்.

Share This