ரவிகரன் எம்.பியின் தலையீட்டில் ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு

ரவிகரன் எம்.பியின் தலையீட்டில் ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒதியமலைக் கிராமத்திலிருந்து 14.07.2025 இன்று மரபுவழியில் பேருந்து போக்குவரத்து சேவை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான ஒதியமலைக் கிராமம் தொடக்கம், கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப்பத்திரமுள்ள தனியார்பேருந்து நீண்டகாலமாக ஒதியமலைக் கிராமத்திற்கு சேவையை வழங்குவதில்லை.

குறிப்பாக கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான்வரையிலேயே இந்த போக்குவரத்து சேவை இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு ஒதியமலைக் கிராமத்திற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் இருந்தும் நீண்டகாலமாக தமது கிராமத்திற்கு, குறித்த பேருந்து, சேவைகளை வழங்காத நிலமைதொடர்பில் பலதடவைகள் உரியதரப்பினரிடம் கிராமமக்களால் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்வுகாண்பதற்கு உரிய தரப்பினர்களால் நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படாத நிலையே தொடர்ந்து இருந்துவந்துள்ளது.

இதனால் ஒதியமலைக்கிராம மக்கள் மற்றும் ஒதியமலையிலிருந்து வெளியிடங்களுக்கு பாடசாலைகளுக்குச்செல்லும் மாணவர்கள் பெருத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் ஒதியமலைக்கிராம மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் இதுதொடர்பில் முறைப்பாடுசெய்யப்பட்டது.

இத்தகையசூழலில் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஒதியமலைக் கிராமத்திற்கு குறித்த பேருந்து, சேவையை வழங்காமை குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தோடு எல்லைக் கிராமமான ஒதியமலை மக்களின் போக்குவரத்து இடர்பாடர்பாட்டைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில் ஒதியமலைக்கிராமத்திற்கு குறித்த பேருந்து சேவையை வழங்கவேண்டுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய 14.07.2025 இன்றைய தினம் முல்லைத்தீவின் எல்லைக்கிராமமான ஒதியமலைக் கிராமத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பங்கேற்புடன் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறிப்பாக மரபுவழயில் ஒதியமலைப் பிள்ளையார் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பேருந்து சேவைகள் ஆரம்பித்துவகை்கப்பட்டன.

இவ்வாறாக ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்து இடர்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This