பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பொலிஸாரின் தன்னிச்சையாக கைதுகள் நிரூபனமானது

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவரை, இந்தச் சட்டத்தின் கீழ் அவர் எந்தக் குற்றமும் செய்யாததால், அவரை பிணையில் விடுவிக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு ‘ஒன்பது மாதங்கள்’ தேவைப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸார், மாவனல்லையைச் சேர்ந்த, விமானப் பணியாளர் பாடநெறி மாணவரான 21 வயது மொஹமட் ஷுஹைல் மொஹமட் ரிபாய், தனது சமூக ஊடகக் கணக்கில் இஸ்ரேலுக்கு எதிரான எமோஜியை வெளியிட்டதாகக் கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து ஒக்டோபர் 24, 2024 அன்று கைது செய்தனர்.
ஜூலை 9, 2025 புதன்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்பது மாதத்திற்கு முன்னர் முஸ்லிம் இளைஞரை கைது செய்த தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஷுஹைல் எவ்வித குற்றத்தையும் இழைக்கவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவராததால், அவரை பிணையில் விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முஸ்லிம் இளைஞர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸனலி, எம்.கே.எம். பர்ஸான் மற்றும் பிரதிபா கீத்ம பெர்னாண்டோ ஆகியோர் பொலிஸாரை கடுமையாக ஆட்சேபித்துள்ளதோடு, மேலும் எந்தக் குற்றமும் செய்யாத ஷுஹைலின் வாழ்க்கையுடன் இவ்வளவு காலம் விளையாடியது ஏன் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.
“எந்தக் குற்றமும் செய்யாத ஷுஹைலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவ்வளவு காலம் தடுத்து வைத்தது ஏன்?” நீதவான் பொலிஸாரிடம் கேட்டதாக சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தெஹிவளை பொலிஸார் 2025 மே 27 ஆம் திகதி அறிக்கை தயாரித்து சட்டப் பிரிவுக்கும், சட்டமா அதிபருக்கும் அனுப்பி சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ள சூழ்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி பிணை வழங்க நீதவான் நீதிமன்றத்தால் முடியாது என கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய தெஹிவளை பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக எந்தக் குற்றமும் கண்டறியப்படாவிட்டால், சட்டப் பிரிவு மூலம் சட்டமா அதிபருக்குத் தெரிவிக்குமாறு தெஹிவளை பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தான் செயல்படுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைத்த இளைஞரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவானிடம், சந்தேகநபர் பயங்கரவா தடைச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்பதை பொலிஸாரே உறுதிப்படுத்தியிருந்தாலும், அவரை விடுவிக்க தனக்கு அதிகாரம் இல்லையென தெரிவித்ததாக சட்டத்தரணி பிரதிபா கீத்ம பெர்னாண்டோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“தெஹிவளை பொலிஸாரினால் தான் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்பதை நான் சொன்னேன். தெஹிவளை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து, PTA-வின் கீழ் அறிக்கையிடப்பட்டபோது உங்களால் விளக்கமறியலில் வைக்க முடியுமெனின், எந்தவொரு காரணமும் பொருத்தாத நிலையில், இந்த நபரை விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது என நான் வலியுறுத்தினேன். தற்போது இது சட்டமா அதிபரின் ஆலோசனையில் இருப்பதால், இந்த விடயத்தில் நான் பொறுப்பேற்க முடியாது என அம்மணி கூறினார். சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கவில்லை என்றால், இது தொடர்பாக தான் ஒரு முடிவை எடுக்க முடியும். எனவே, நான் ஒரு முடிவை எடுக்க முடியாது. எனவே, நான் சட்டமா அதிபரை சந்தித்து, ஒரு சமர்ப்பிப்பைச் செய்து, அந்த உத்தரவைப் எடுத்துக்கொண்டு வருமாறு கூறினார்.”
இருப்பினும், பிணை வழங்குவதில் நீதிபதிகள் புத்திசாலித்தனமாக செயற்படவும், பிடிவாதமாக இருக்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் அண்மையில் கடுமையாகக் கூறியிருந்தது.
காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக களுகெலேவில் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் பொலன்னறுவை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்தபோது, பிரதம நீதவான் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதிபதி எஸ். துரைராஜா ஆகியோர் இந்த விடயத்தை அறிவித்தனர்.
பிணை வழங்குவது வழக்கமாக இருக்க வேண்டும் என்றும், அதை மறுப்பது விதிவிலக்காக இருக்க வேண்டும் எனவும் யசன்ன கோதாகொட அண்மையில் கூறியிருந்தார்.
பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும்போது ‘நியாயமான சந்தேகத்தின்’ தரநிலை குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து தெளிவான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரைத்திருந்தது.
மொஹமட் ஷுஹைல் மொஹமட் ரிபாயின் வழக்கு ஜூலை 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, அன்றைய தினம் முஸ்லிம் இளைஞரை திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கல்கிஸை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஷுஹைல் 9 மாதங்களாக தடுப்புக்காவலில் வைத்த பொலிஸார், கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற போரா மாநாட்டில் புகைப்படம் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சந்தேகநபரான ‘பொடி சஹரான்’ மூன்று நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என ஜூலை 9ஆம் திகதி எம்.பி., முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஒரு இமோஜியை பதிவிட்டமைக்காக ஒரு இளைஞரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது வெட்கக்கேடானது என நாடாளுமன்றத்தில் கண்டித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருத்து சுதந்திரத்தின் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் அரசாங்க விரோத சக்திகளை இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு வழியாகும் என்று எச்சரித்தார்.
இஸ்ரேலுக்கு எதிரானவர்களை வேட்டையாடும் பொலிஸார் உண்மையில் இலங்கையர்களா அல்லது இஸ்ரேலியர்களா என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலஸ்தீன இனப்படுகொலையை எதிர்த்து இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கரை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மொஹமட் லியாவுதீன் மொஹமட் ருஷ்டி என்ற இளைஞர் இறுதியில் விடுவிக்கப்பட்டார்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் தலைமையிலான எதிர்ப்பினால் ஏற்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அவரது விடுதலை சாத்தியமானது.